dhool

dhool
Click on the above image and Join the discussion in our Facebook group

Tuesday, March 19, 2024

HAPPY BIRTHDAY SHYAM


 

நல்ல சேதி சொல்ல வேண்டும்

🎵💖
இசையமைப்பாளர் திரு ஷியாமிடம் இன்று நீண்ட இடைவெளிக்கு பின் பேசினேன். பேசி சில வருடங்கள் ஆகிவிட்டதென்பதால் என்னை மீண்டும் அறிமுகம் செய்து கொண்டேன். நண்பர் சுந்தருடன் அவரது இல்லதிற்கு சென்றதை ஞாபகப்படுத்தி துபாயிலிருந்து பல முறை அவரிடம் ஃபோனில் பேசியதை கூறினேன். துபாய் என்று சொன்னவுடன் அவருக்கு ஞாபகம் வந்தது. 'ஆ... அந்த சரவணனா! சொல்லுங்க. எப்படி இருக்கிறீங்க?' என்று பரிவுடன் கேட்டார். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை ஆசையாக தெரிவித்தேன். அன்புடன் ஏற்றுக்கொண்டார்.
காலையிலிருந்து அவரது பாடல்களை கேட்டுக்கோண்டிருக்கிறேன் என்பதை சொன்னதும் சந்தோஷப்பட்டார். இன்று காலை நான் கேட்டுக்கொண்டிருந்த அவரது சில பாடல்களை சிலாகித்து கூறினேன். ரசித்து கேட்டார். உடல்நலத்தை பற்றி விசாரித்தேன். 'Hmm... ups and downs.... எனக்காக பிரார்த்தனை செய்யுங்க' என்றார். 'நிச்சயமாக சார். நான் மட்டுமில்ல... உங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க... We will all pray for your well being!' என்று கூறினேன். 'Thank you... God bless you!' என்றார் ஷியாம்.
SPB மறைந்த போது அவரை பற்றி ஷியாம் பேசிய காணொளியில் ஷியாம் இப்படி தொடங்கினார் 'நான் ஒரு இசையமைப்பாளன். என் பெயர் ஷியாம்'. மலையாளத்தில் 200 படங்களுக்கு மேல் இசையமைத்தவர், தமிழில் சில படங்களுக்கே இசையமைத்திருந்தாலும் அவற்றில் பல நல்ல பாடல்களை தந்தவர்....இப்படிப்பட்ட சாதனையாளர் இத்தனை அடக்கத்துடன் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். அது தான் ஷியாம்- A humble, unassuming genius!
சென்னையிலேயே பிறந்து வளர்ந்து சென்னையிலேயே பணி புரிந்து 87 வயதில் இன்றும் சென்னையிலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு தமிழரை மலையாள ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்... SPBக்கு ஒரு 'மழை தருமோ என் மேகமும்' ஜானகியம்மாவுக்கும் 'கலீர் கலீர்' என்ற காவியமும் கொடுத்த ஷியாம் அவர்களை நாமும் எவ்வளவு கொண்டாடவேண்டும்!
ஜானகியம்மா அடிக்கடி ஷியாமின் அபார திறமையை மனதார பாராட்ட நான் கேட்டிருக்கிறேன். SPB பற்றி ஷியாம் பேசிய காணொளியில் SPB தன் மேல் வைத்திருந்த அன்புக் கலந்த மரியாதையை நெழ்ச்சியுடன் விவரித்தார்.
நான் இன்று காலை கேட்டுக்கோண்டிருந்ததும் ஷியாமின் இசையில் SPB- ஜானகி பாடிய சில அருமையான டூயட் பாடல்களைத்தான்.
SPB- ஜானகி டூயட் பாடல்கள் என்றாலே நம் நினைவில் உடனே வருவது இளையராஜா- Quite naturally. ஏனென்றால் அவ்விருவரின் திறமைகளை நன்றாக அறிந்து கொண்டு அவர்களை ஊக்குவித்து அற்புதமாக பயன்படுத்தியவர் இளையராஜா.
ஆனால், அதற்கு முன்னரே சில இசையமைப்பாளர்கள் SPB- ஜானகியை ஜோடி சேர வைத்து சில அழகான பாடல்களை வழங்கியிருக்கிறார்கள். மெல்லிசை மன்னர் ( பவுர்ணமி நிலவில்/ பூங்கொடியே பூங்கொடியே/ கேள்வி கேட்கும் நேரமல்ல இது/ அங்கே வருவது யாரோ), KVM ( இரவுகளை பார்த்ததுண்டு/ கண்ணால் நடத்தும் ஒரு கதை), V. குமார் ( ஏம்மா கண்ணு), சங்கர்- கணேஷ் (ஒன்றே ஒன்று),GKV (தேன் சிந்துதே வானம்) என்று போகிறது இந்த வரிசை.
SPB- ஜானகிக்கு இப்படி அழகான பாடல்களை கொடுத்த ஆரம்பகால இசையமைப்பாளர்களின் இந்த வரிசையில் ஷியாமையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் ஷியாமின் இசையில் SPB- ஜானகி பாடிய சில அழகான டூயட் பாடல்களில் இன்று சற்று இளைப்பாறலாம்....
1974ரில் ரவிச்சந்திரன்- ஷீலா நடிப்பில் வந்த 'அப்பா அம்மா' ஷியாம் தனியாக இசையமைத்த முதல் தமிழ் படம். படம் படுதோல்வி அடைந்ததால் பாடல்களும் அதிக கவனம் பெறவில்லை.
இந்த படத்தில் 'மாட்டிக் கொண்டாயா' என்ற பாடலில் பாலுவையும் ஜானகியையும் ஜோடியாக பூட்டி வைத்தார் ஷியாம். அவ்விருவரும் சந்தோஷம் பொங்க சிரிப்பு மூட்டி விடுகிறார்கள். ஆமாம், ஒவ்வொரு வரியும் விதவிதமான சிரிப்புடன் முடிக்கும் படி வித்தியாசமாக பாடலை அமைத்திருக்கிறார் ஷியாம். பாலுவும் ஜானகியும் சிரித்துச் சிரித்து நம்மை சிறையிலிடுகிறார்கள்.
கேட்டு பாருங்கள் இந்த சிரிப்பில் உண்டாகிய சங்கீதத்தை:
* * * * * *
அடுத்து கமல்ஹாசனின் ஆரம்பகால முற்போக்கு எண்ணங்கள் கொண்ட 'உணர்ச்சிகள்' (1976) படத்திலிருந்து ஒரு பாடல். 'ராசலீலா' மலையாள படத்தின் தமிழாக்கம். R.C. சக்தியுடன் இணைந்து கமலும் கதை- திரைக்கதையில் ஈடுபட்டார். கமல், ஸ்ரீவித்யா, L. காஞ்சனா, மேஜர் என பலர் நடித்திருந்தார்கள்.
இந்த படமும் தோல்வி படமே. தமிழை பொருத்தவரை ஷியாமின் கதை இப்படித்தான்- பெரும்பாலும் தோல்வியடைந்த சிறு பட்ஜட் படங்களே அவருக்கு கிடைத்தன. நான் ஷியாமை பற்றிய என் நீண்ட கட்டுரையில் குறிபட்டிருந்ததைப்போல் பல படங்கள் வெளிவரவும் இல்லை. ஆனால், ஷியாமின் இசையில் எப்பொழுதும் ஒரு குறையும் இருந்ததில்லை.
உணர்ச்சிகள் படத்தின் இந்த SPB- ஜானகி டூயட்டை எடுத்துக்கொள்ளுங்கள். இளம் காதலர்களின் உள்ளங்களில் எவ்வளவு போராட்டங்கள் இருக்கும்... .அந்த தவிப்புகளை, தயக்கங்களை, குறும்புகளை, குழப்பங்களை எவ்வளவு நளினமாக படம்பிடிக்கிறது ஷியாமின் மெட்டும், SPB- ஜானகியின் குரலும்....
நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்:
* * * * *
மூன்றாவதாக நாம் கேட்கபோகும் பாடல் ரவீந்தர்- அம்பிகா நடிப்பில் வெளிவந்த 'இதயம் பேசுகிறது' (1982) என்ற படத்திலிருந்து ஷியாமின் இசையில் SPB- ஜானகி பாடிய இந்த ரம்மியமான பாடல். 'பூமேனி அஞ்சுமோ' என்று SPB கெஞ்சும் போதும், ஜானகி ' மயிலிறகில் மஞ்சமோ' என்று கொஞ்சும் போதும் நம் இதயங்களை கொள்ளை கொள்கிறது பாடல்.
கனவே தீண்டாதே...
கதையை தூண்டாதே...
இதயம்....இதயம்....இதயம்....
* * * * * *
அடுத்தாக வந்த சுவடு தெரியாமல் மறைந்து போன 'குப்பத்துப் பொண்ணு' என்ற விழலுக்கு ஷியாம் இறைத்த ஓர் தேனருவி... இலங்கை வானொலியிலும் விவித் பாரதியிலும் ஒரு காலத்தில் அடிக்கடி ஒலித்த பாடல்...இன்று காலத்தின் மூடுபனியில் மறைந்து போன பாடல்... இந்த அழகிய பாடலை மீட்டெடுத்து மீண்டும் ஒரு முறை கேட்கலாம்... இந்த ரெண்டு புறாக்களோடு நாமும் இசைவானம் எங்கும் மேயலாம்....
* * * * *
அதே வருடம், P.C.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில், ஜெயதேவியின் தயாரிப்பில், மௌலியின் இயக்கத்தில், பிரதாப்- சுஹாசினி நடிப்பில் வெளிவந்த 'நன்றி, மீண்டும் வருக' என்ற படத்தில் ஷியாமின் இசையில் ஒரு குதூகலமான காதல் டூயட்... பல்லவி எது என்று ஷியாம் நம்மை தடுமாற வைக்கும் வித்யாசமான வார்ப்பு.... இந்த பாடலை குறிப்பிட்டால் எண்பதுகளில் வானொலி கேட்டோரின் உதட்டில் ஒரு புன்னகை மலரும்... SPB and Janaki have a field day!
* * * * * *
எண்பதுகளின் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மோகன். முன்னணி நடிகையரில் ஒருவர் சரிதா. இந்த இருவரும் ஜோடி சேர்ந்து நடித்த ஒரே படம் 1984ல் ஜெயதேவி இயக்கத்தில் வெளிவந்த 'நலம், நலமறிய ஆவல்'.
இந்த படத்திலும் ஷியாமின் இசையமைப்பில் SPB- ஜானகி ஒரு அருமையான பாடலை பாடியிருக்கிறார்கள்.... ஒரே முறை இந்த பாடலை 'ஒளியும் ஓலியும்' நிகழ்ச்சியில் பார்த்தேன். வானொலியில் கேட்டதேயில்லை. ஆனால் பாடல் மனதில் தங்கிவிட்டது. பல வருடத்தேடலுக்கு பின் லண்டன் நண்பர் ஜனா இந்த பாடலை இலங்கையில் கண்டெடுத்து எனக்கு அனுப்பினார்.
வாலியின் வரிகள். ஆரம்பமே அமர்க்களம்- காதலும் மோதலும், செல்ல சிணுங்கலும்- Ah....the ecstasy of being in love!
//என் ஜன்னல் கதவை மூடி வைத்தது எதனாலே?
உன் உள்ளம் தப்பி ஓடும் அதனாலே!
என் குளியலறை மீது பூவைப்போட்டது எதனாலே?
ஓ...உனக்கென்ன தெரியும்..உன் பார்வைக் பட்டு மேனி வேகும் அதனாலே!
ஏன் கோயிலில் காணவில்லை?
வரம் கேட்டது கிடைத்ததம்மா!
என் தந்தையை சந்தித்ததேன்?
கல்யாணம் கட்டத்தான்..... கெட்டிமேளம் கொட்டத்தான்.....!
நல்ல சேதி சொல்ல வேண்டும்...
என் பக்கம் வந்தால் என்ன!//
கல்யாணமென்றவுடன் ஷியாம் மங்களகரமான நாதஸ்வரத்தை ஒலிக்கச்செய்கிறார்... இரண்டாவது இடையிசையை சித்தாரும் ஜானகியும் தனதாக்கிக்கொள்கிறார்கள்.... எவ்வளவு அழகான பாடல்!
* * * * * *
எத்தனையோ அழகான பாடல்களை ஷியாம் சார் தந்திருக்கிறார். ஆனால் இன்று தொலைக்காட்சியிலோ வானொலியிலோ அவை ஒளிக்க/ ஒலிக்க செய்வதில்லை. ஷியாம் சாரின் பிறந்த நாளில் இந்த ஆறு பாடல்களை பதிவிடுகிறேன். அவை மீண்டும் இசை ரசிகர்களின் செவிகளில் வளம் வந்தால் என் ஆதங்கம் சற்றேனும் ஆறும். நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?

- Saravanan Natarajan